மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் அகில் போகன்கர் என்பவர் லாரி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அங்கு லாரி ஓட்டுநராக விக்கி என்ற நபர் பணிபுரிந்துவந்தார். இவரிடம் இரு வாரங்களுக்கு முன்பு உரிமையாளர் அகில் 30,000 ரூபாய் கொடுத்து சரக்குகளை வாங்கி பரிவர்த்தனை செய்யுமாறு அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் விக்கி இடத்தை காலி செய்துவிட்டு இரு வாரங்கள் தலைமறைவானார். 30,000 ரூபாயைக் குடியும், கும்மாளமுமாகச் செலவுசெய்துவிட்டு பணம் காலியானவுடன் அவர் திரும்பியுள்ளார்.
திரும்பிவந்தவரிடம் விவரத்தை விசாரித்ததும் ஆத்திரம் அடைந்த உரிமையாளர் ஓட்டுநர் விக்கியை தனது ஊழியர்களைக் கொண்டு உத்திரத்தில் தொங்கவிட்டு அடித்துள்ளார்.
இனி இதுபோல தப்பு செய்வாயா எனக்கேட்டு பெல்டால் அகில் போகன்கர் விக்கியை அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், ஓட்டுநர் விக்கியை வன்முறையான முறையில் அடித்து உதைத்த உரிமையாளர் அகிலைக் கைது செய்து மும்பை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.