மகாராஷ்டிரா அமைச்சரவையில் பெண்கள், குழந்தைகள் நலத் துறையை கவனித்துவருபவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோமதி தாகூர். இவர் சமீபகாலமாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிவருகிறார்.
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்க்கேள்விகள் வந்தபோது, “சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது பணம் சம்பாதிக்க அல்ல; அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவும் தொடங்கவில்லை” என்று உளறிக் கொட்டினார்.
அந்தச் சூடு தணிவதற்குள் அம்மணி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார். அமராவதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யசோமதி, “எங்கள் கலாசாரம் சொல்கிறது, பசுவைத் தொட்டால் எல்லா எதிர்மறை எண்ணங்களும் விலகிவிடும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
யசோமதி இவ்வாறு பேசுவது முதல்முறையல்ல. முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக யசோமதி மீது புகார் உள்ளது. அதில், “நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம், எங்கள் பைகள் நிறையவில்லை. ஆகவே எதிர்க்கட்சிகளிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
யசோமதியின் உளறல் பேச்சுகள், மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு தர்மசங்கத்தை ஏற்படுத்திவருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.
இதையும் படிங்க: உங்கள் வாக்கு யாருக்கு? - பெண்ணின் காந்தக் குரலால் திக்குமுக்காடும் டெல்லி!