வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளியும் சாமானியர்களால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. அன்றாட சமையல் பயன்பாட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று வெங்காயம், தக்காளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொண்ட முயற்சியால் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வெங்காய விலை குறைந்தது என நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள், தக்காளி விலை உயர்ந்துவிட்டது. தலைநகர் டெல்லியில் தக்காளி தற்போது கிலோவுக்கு 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, இமாசல பிரதேச போன்ற மாநிலங்கள் தக்காளி விளைச்சலில் முன்னணியில் இருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் குறைந்ததால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாத தொடக்கத்தில் ரூ.45க்கு விற்கப்பட்ட தக்காளி விலை, பின்னர் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது தக்காளி விலை ரூ.80க்கு வரை அதிகமாகியுள்ளது.
இந்த பிரச்னையில் தலையிட்ட மத்திய அரசு, அரசின் கடைகள் மூலம் தக்காளிக்குப் பதில் தக்காளி கூழ் பாக்கெட்டுகளை சலுகை விலையில் விற்க உத்தரவிட்டது. அதன்படி, 200 கிராம் தக்காளி கூழ் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் அதை வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: தக்காளி வரத்து குறைவு....உள்ளூர் தக்காளிகளுக்கு விலை உயர்வு !