புதுச்சேரியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரக் கடைகள் இருந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், நகரப் பகுதிகளில் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற கடந்த ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடைகளை நகராட்சித் துறையில் அப்புறப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று சாலையோர வியாபாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை கட்சியினர் எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி அக்கட்சியினர் எஸ்.பி. அலுவலகத்தை இன்று முற்றுகையிட பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர், இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் கூட்டம் கலைந்து சென்றது. இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது