மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், 2019 - 2020ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள 1,101.61 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2017 - 18ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையில் 4,073 கோடி ரூபாயை விரைந்து வழங்கிட வேண்டும். 2018 - 2019ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள 553.01 கோடி ரூபாய், 2019 - 2020ஆம் ஆண்டிற்கான நிலுவையிலுள்ள 1101.61 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான அம்சங்களும் எளிய மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக் குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. உணவு தானியங்களை விற்பனை செய்யும் வணிகர்கள், உறுதி மொழி பத்திரத்தினை கால தாமதமாக தாக்கல் செய்யும் சூழலில் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜெயக்குமார் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ், ஜவுளி, காலனி, தொலைபேசி, உரங்கள் போன்ற பொருள்கள் தலைகீழான வரி கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இதனால் தொழில் புரிவோர் பெரும் இடர்பாடுகளை சந்திக்கின்றனர். இதனை சீர்செய்யும் விதமாக சில பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. துணி, ஆயத்த ஆடை ஆகியவை மீதான வரியை ஐந்து விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்துவது ஏற்புடையது அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி யாருடைய கரம்பற்றி நடப்பாள் அந்த ஏழு வயது பிஞ்சு குழந்தை