சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பையடுத்து, திமுக எம்பி திருச்சி சிவா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் ஐந்து நாடுகளுக்குள் வந்துள்ளது.
இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் நான்காம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சில மாநிலங்கள் கரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து, பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. சிபிஎஸ்சி பள்ளிகளும் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
ஆனால், மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த தொற்று காலத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து மத்திய அமைச்சகம் மறு ஆலோசனை செய்யவேண்டும்.
ஊரடங்கால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், சிபிஎஸ்சி ஆசிரியர்களுக்கும் இந்த அறிவிப்பு மேலும் அழுத்தத்தைத் தரும் வகையில் உள்ளது.
எனவே, மத்திய அமைச்சகம் இந்த இக்கட்டான சூழலை புரிந்துகொண்டு மாணவர்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவதைத் தவிர்க்கவேண்டும். மேலும், காலதாமதமின்றி தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.