டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு இணையாக தற்போதைய சமூகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலி என்றால் அது டிக்-டாக் தான். இந்த செயலியில் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், என அனைவரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் பதிவிடும் இந்த வீடியோ பெரும்பாலான சமயங்களில் அவர்களுக்கே விணையாகி விடுகிறது.
அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்-டாக்கில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனது மட்டுமின்றி காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு திறந்த வெளியில் வெள்ளை நிற வாகனத்தை ஓட்டிக்கொண்டு இளைஞர் வருகிறார். அப்போது வாகனம் நகர்ந்துகொண்டிருக்கம்போது, திடீரென்று வாகனத்தின் மேற்பகுதிக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும் அவர் பின்னர் மீண்டும் கீழே குதித்து வாகனத்தினுள் செல்கிறார்.
இந்த வீடியோவை அவர் டிக்-டாக் செயலியில் பதிவிடவே அது காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு முக்கிய காரணம் அந்த இளைஞர் வந்த வாகனத்தின் முன்பகுதியில் டெல்லி போலீஸ் என எழுதப்பட்டிருந்ததே ஆகும். பின்னர் இந்த வீடியோ குறித்த தகவல் காவல் துறையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
அப்போது, அந்த வாகனம் தனியார் வாடகை நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் தேவைப்படும் சமயத்தில் வாடகைக்கு எடுக்கும் இந்த வாகனத்தை, அந்நிறுவன கான்ராக்டரின் நண்பர் தான் இந்த வீடியோவில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அந்த கான்ராக்டருக்கு டெல்லி காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.