திருச்சூர்: திருச்சூர் குட்டனெல்லூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் பல் மருத்துவரைக் குத்திய நபரை போலீசார் செவ்வாய்க்கிழமை (அக்.6) கைது செய்தனர்.
முவாட்டுப்புழாவைச் சேர்ந்த சோனா, செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு தனது கிளினிக்கில் மகேஷால் குத்தப்பட்டார். தாக்குதலுக்கு ஆறு நாள்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திலிருந்து மகேஷ் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் மகேஷை திருச்சூரில் உள்ள பூன்குன்னத்தில் சிறப்பு படை காவலர்கள் நேற்று (அக்.6) கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் ஒல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென்னி ஜேக்கப் தலைமையிலான சிறப்புக் குழு, பூன்குன்னத்தில் கைதுசெய்தது.
இது குறித்து ஒல்லூர் காவல் நிலைய சிஐஐ பென்னி ஜேக்கப் கூறுகையில், “செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பூங்குன்னத்தில் உள்ள மறைவிடத்திலிருந்து நாங்கள் அவரை கைது செய்தோம்.
கடந்த சில நாள்களாக அவர் எங்களிடமிருந்து தப்பிக்க பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அவரது இருப்பிடம் பற்றிய தகவல்களைப் பெற்ற உடனேயே நாங்கள் அவரைக் கண்டுபிடித்தோம். கொலைக்கு அவர் பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளோம். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்” என்றார்.
சோனாவும் மகேஷும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரிசூரில் உள்ள குரியாச்சிராவில் ஒன்றாக வசித்து வந்தனர்.
கட்டட வடிவமைப்பாளராக இருக்கும் மகேஷ், கிளினிக் அமைப்பதில் சோனாவுக்கு உதவியுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே பண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேஷ் சோனாவிடம் இருந்து ஒரு பெரிய தொகையை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளதார். இதற்கு சோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பக கடந்த மாதம் 25ஆம் தேதி சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு பழிவாங்கவே இந்தக் கொலை நடந்துள்ளது. சோனாவின் அடிவயிற்றில் கத்திக் குத்து பாய்ந்துள்ளது.
இதனால் பல்மருத்துவர் சோனாவை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சோனாவுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார்.