கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் ஹவால்டர். இவருடைய மனைவி ரேணுகா ஹவால்டர், மகள் ஐஸ்வர்யா, மகன் அகிலேஷ். இவர்களுடைய குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மூவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கருத்து வேறுபாடால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய ரேணுகாவும், அவருடைய இரு பிள்ளைகளும் கொல்ஹாரா அருகே கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இதையறியாத அவரது குடும்பத்தார் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல்போன ரேணுகாவின் சடலம் கிருஷ்ணா நதியில் காவல் துறையால் மீட்கப்பட்டது. அதற்கடுத்த நாள் அவருடைய மகள், மகன் இருவரின் உடல்களையும் அதே ஆற்றில் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களில் காணாமல்போனதாக எந்தப் புகாரும் வராததால், சடலங்களை அனாதை உடல்கள் எனக் கணித்த காவல் துறையினர், காலம் தாமதிக்காமல் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், ரேணுகாவின் குடும்பத்தினர், ரேணுகாவையும், அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என இன்று புகாரளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரிக்கும்போது, கிருஷ்ணா ஆற்றில் மீட்கப்பட்ட மூன்று சடலங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் ரேணுகா, அவருடைய இருபிள்ளைகளுடன் ஒரு வாரத்திற்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆரோவில்லில் 20ஆவது குதிரையேற்றப் போட்டி: நாளை முதல் மார்ச் 1 வரை...