புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதிகளில், சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் துறை உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையில் காவல் துறையினர் திருட்டில் ஈடுபடுபவர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் பூர்ணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) மூர்த்தி, டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்குமார், பார்த்திபன் ஆகியோர் கடந்த பல நாள்களாக மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்பின்னர் அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், பின் திருட்டு வழக்கு, நோய் பரப்புதல், அரசாங்கம் போட்ட உத்தரவை மதிக்காமல் இருத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல்கொள்ளை வழக்கில் டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
இனிமேல், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க புதுவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.