இந்தியாவில் ஊரடங்கு காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது வெளிமாநில தொழிலாளர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிகார், மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக மீரட் நகரில் உள்ள ஜமுனியாபாக் மைதானத்தில் ஏராளமான பயணிகள் வெகுநேரமாக காத்திருந்தனர்.
1,200க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் குடிபெயர்ந்தத் தொழிலாளர்கள் ரயிலுக்காக குவிந்திருந்தனர்.
குழந்தைகளை வைத்துக்கொண்டு, சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கும் தங்களுக்கு அரசு சார்பிலும், ரயில்வே நிர்வாகம் சார்பிலும் எந்தவித உதவியும் செய்யப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் தரக்கூடிய உணவு மட்டுமே தங்களின் பசியைப் போக்குவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆந்திரா தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு: சொந்த ஊருக்கு அனுப்புமா அரசு?