ப.சிதம்பரம் கைது குறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணத்தால், எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் ஜோடித்த வழக்கை உருவாக்கி, அந்த சம்பவங்கள் எல்லாம் 2008ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறுகிறார்கள். அதற்காக 2017ஆம் ஆண்டு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறார்கள். அதன்பின்னர் நான்கு முறை சோதனை நடத்திவிட்டார்கள். இருபது முறைக்கு மேல் எனக்கு சம்மன் அனுப்பிவிட்டார்கள்.
ஒவ்வொரு சம்மனுக்கும் 10 மணி நேரம் அவர்களுக்கு முன் ஆஜராகினேன். சிபிஐயின் விருந்தாளியாக 11 நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால் இதுவரையிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே இது ஒரு உண்மையான நடவடிக்கையாகத் தெரியவில்லை. யாரையோ திருப்திப்படுத்த இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. என் தந்தை எங்கேயும் ஓடி ஒளியவில்லை" என்றார்.
இந்த கைது நடவடிக்கைக்கு யாராவது பின்னணியில் இருக்கிறார்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, " ஆம், எனது தந்தை கைது நடவடிக்கைக்கு பின்னணியில் பாஜகவினர் தான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்" என்றார். மேலும் இதற்குப் பின்னணியாக ட்ரம்ப் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அவர் இல்லை என்று கூறினார்.