மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் நெருக்கமுள்ள குடியிருப்புகளான தாராவியில் மூன்றாவதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மூன்றாவது நபர் மருத்துவர். இவருக்கு 35 வயது. இவர், மக்கள் நெருக்கமுள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியின் பிரதான சாலையில் கிளினிக் வைத்து நடத்திவருகிறார்.
இதுகுறித்து மும்பை பெருநகர மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "தாராவியின் பிரதான சாலையில் கிளினிக் நடத்திவரும் மருத்துவர் முக்கியமான தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். தற்போது இவர் வசித்துவரும் கட்டடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவருடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மருத்துவரிடம் பயணம் மேற்கொண்டதற்கான எந்தவொரு விவரக் குறிப்பும் இல்லை. அது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டுவருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராவியின் குடிசை மாற்றுவாரிய கட்டடத்தில் வசித்துவந்த 56 வயது மதிக்கத்தக்க துணிக்கடை உரிமையாளருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுதான் தாராவியில் முதல் கரோனா பாதிப்பு.
அந்நபர் அன்று மாலையே உயிரிழந்தார். வோர்லி பகுதியில் வசித்துவந்த நகராட்சித் தூய்மைப் பணியாளர் நேற்று காலை தாராவியில் பணி அமர்த்தப்பட்டார். அவருக்கும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் இருக்கும் அப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததோடு, அங்கு வசிக்கும் இரண்டாயிரத்து 500 பேர் வெளியே செல்ல பெருநகர மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இச்சூழலில் இதன் தாக்கம் இந்தியாவையும் உலுக்கிவருகிறது. அதன்படி, நாட்டிலேயே மகாராஷ்டிரா கரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இருக்கிறது.
இதையும் படிங்க: 'கரோனாவால் இறப்பவர்கள் தியாகிகள்'- அசாதுதீன் ஓவைசி ட்வீட்!