ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்துவந்த சிறப்புத் தகுதிகளை பறிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, அவர் வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "என் மாநிலமே பற்றி எரியும்போது, நான் எப்படி என் விருப்பத்தின்படி வீட்டுக்குள் இருக்கப் போகிறேன். என் மக்கள் அனைவரும் சிறைவைக்கப்படுகின்றனர். இது நான் நம்பும் இந்தியா அல்ல. நான் வீட்டுச் சிறை வைக்கப்படவில்லை, என் விருப்பப்படி வீட்டுக்குள் இருக்கிறேன் என உள் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சொல்வது பொய்.
கதவுகள் திறக்கப்பட்டவுடன் வெளியே வருவோம்-போராடுவோம்-நீதிமன்றத்திற்கு செல்வோம். நாங்கள் வன்முறைவாதிகள் அல்ல; அமைதியின் பெயரில் தீர்வு காண விரும்புகிறோம். எங்களைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். உமர் அப்துல்லா சிறையில் உள்ளார்" என வேதனையுடன் தெரிவித்தார்.