அண்டை நாடான நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு, தாய் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதேபோல் இந்தியாவிலுள்ள புலம்பெயர்ந்த நேபாளத் தொழிலாளர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள், அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, வீடியோ கான்ஃபெரன்சிங் வாயிலாக விசாரணை நடத்தியது. மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர், 'நேபாளத்திலிருந்து இந்தியர்கள் நாடு திரும்பிய நிலையில் சம்பவார், லோஹர்காட் உள்ளிட்டப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று வாதிட்டார்.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேக்தா, 'நேபாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். நேபாளம் மட்டுமல்ல மற்ற வெளிநாடுகளிலுள்ள இந்தியர்கள் மே 7ஆம் தேதிக்குப் பின்னர், சிறப்பு விமானங்கள் மூலமாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்' என்று பதிலளித்தார்.
மத்திய அரசின் பதிலைத் தொடர்ந்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். கரோனா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.