அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி, அம்மாநில குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல் துறை துணை கண்காணிப்பாளராக சமீபத்தில் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், திருப்பதியில் நடைபெற்ற காவல் துறைக் கூட்டத்தின்போது டிஎஸ்பி ஜெஸ்ஸியை அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான ஷ்யாம் சுந்தர் சல்யூட் வைத்து வரவேற்றுள்ளார். இந்த பெருமையான தருணத்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பொறியியல் பட்டதாரியான ஜெஸ்ஸி, சிவில் சர்விஸ் தேர்வில் தோல்வியடைந்து பின்பு குரூப் ஒன் தேர்வில் கலந்துகொண்டு தனது கடும் உழைப்பினால் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜெஸ்ஸி, " எனது தந்தைக்கு நான் ஐஏஎஸ்ஸாக வேண்டும் என்பதே ஆசை. சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சிப்பெற முடியாத காரணத்தால், குரூப் ஒன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். சிறுவயதிலிருந்தே, நாங்கள் நாட்டுக்காக சேவை புரிய வேண்டும் என்பதை எனது பெற்றோர் நினைவூட்டிக்கொண்டே இருப்பர்.
எனது தங்கை தற்போது அரசு பல் மருத்துவ கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். எனது இந்த வெற்றிக்கு எனது தந்தையே உந்துதலாக இருந்தார். எனது பதவிக்காலம் முடியும்வரை அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்" என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி