தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவரும் நலகொண்டா நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி.) உத்தம் குமார் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “இது ஒரு ஒழுங்கற்ற, பொருத்தமற்ற தேர்தல் அட்டவணை. தேர்தல் தேதி அறிவிப்பு, வாக்குப்பதிவுக்கிடையே குறைந்தபட்ச இடைவெளிகூட இல்லை. ஆகவே எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
உத்தம் குமார் ரெட்டியின் இந்தக் கருத்தை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் (டி.ஆர்.எஸ்.) செயல்தலைவர் கே.டி. ராமா ராவ் கண்டித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசால் வேட்பாளர்களை நிறுத்தமுடியவில்லை என்று சொன்ன அவர், காங்கிரஸ் கட்சியின் பலவீனத்துக்கு டி.ஆர்.எஸ். என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானாவில் 120 நகராட்சி, ஒன்பது மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த கடந்த 7ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான மறுதினமே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் வருகிற 22ஆம் தேதி நடக்கிறது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் தீவிரமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்