ஹைதராபாத் (தெலங்கானா): மாநில அரசு ஸ்விகி, சொமாட்டோ நிறுவனங்கள் உணவுகளை டெலிவரிசெய்ய இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் இந்தத் தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. மேலும், மே 7ஆம் தேதிவரை இது செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று இருந்ததைத் தொடர்ந்து, அவர் மூலம் 69 நபர்களுக்கு தொற்று பரவியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மேலும், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில், சுகாதாரமான முறையில் உணவுகளைச் சமைத்து உண்ணும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்விகி, சொமாட்டோ நிறுவனங்கள் மூலம் அரசுக்கு லாபம் ஏற்படும் சூழல் இருந்தாலும், லாபத்தைவிட மக்களின் உடல்நலம்தான் மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.