தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள 'டோலி சவுக்கி' பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து அலுவலகம் நோக்கி அவர் வந்துகொண்டிருந்த போது தனது கான்வாயை ( முதலமைச்சரின் பாதுகாப்பு வளையம்) நிறுத்தச் சொன்ன சந்திரசேகர ராவ், வண்டியிலிருந்து கீழே இறங்கினார்.
முதலமைச்சரின் திடீர் நடவடிக்கையால் காரணம் புரியாமல் மற்ற அலுவலர்கள் திகைத்த நிலையில் நிற்க, சாலையோரம் மனுவுடன் நின்று கொண்டிருந்த வயதான மாற்றுத்திறனாளி முதியவரை தன்னருகே அழைத்து வருமாறு கூறினார். உடனடியாக காவலர் அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து வரவே, அவரின் குறையைக் கேட்டறிந்தார் சந்திரசேகர் ராவ்.
முகமது சலீம் என்ற அந்த முதியவர் முன்பு ஓட்டுநராகப் பணி புரிந்தவர் எனவும், ஒரு விபத்தில் கால்களை இழக்கவே, கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் சிரமப்பட்டு வருவதாகவும் சரியான மருத்துவ உதவியும், வீடும் இன்றி தவித்துவரும் தனக்கு இயன்ற உதவியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெலங்கானா முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
முதியவரின் கோரிக்கையை முழுமையாக கேட்ட தெலங்கானா முதலமைச்சர், அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி, சலீமுக்கு உடனடியாக வீடு ஒதுக்கித் தந்துள்ளார். மேலும், அரசே அவரது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சலீமின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இதையும் படிங்க: 'ஹலோ... அமித் ஷாவா... எப்ப சார் வெளிய வருவீங்க?' - டெல்லி வன்முறை குறித்து சிவசேனா தாக்கு