தெலங்கானாவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் சில காலம் நீட்டிக்கப்பட்டு அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்றினால், மாநிலத்தின் நிலைமை வேகமாகச் சீராகும் எனத் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
இதனிடையே இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மாநிலங்களின் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் மே மாதம் 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவில் மட்டும் மே மாதம் 7ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கை இன்னும் நீட்டிக்க சந்திரசேகர் ராவ், உயர் மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாநிலத்தின் நிலையைப் பற்றி ஆலோசனை நடத்திய அவர், கட்டுப்பாட்டு உதவி மையங்கள் மூலம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் சரியாக விநியோகிக்க அறிவுறுத்தினார். கரோனாவால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களைப் பற்றி விசாரித்தார்.
நாட்டில் உள்ள மற்ற முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கரோனாவால் தெலங்கானாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தே உள்ளது. மேலும் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னும் சில காலம் நீட்டிக்கப்பட்டால் மாநிலத்தில் கரோனா வைரஸ் தாக்கம் நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: TRS கட்சியின் 20வது ஆண்டு விழாவை எளிமையாக கொண்டாடுங்கள் - KCR