இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 2) ஊடகங்களை சந்தித்து பேசிய தெலங்கானா பாஜக தலைவரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான சாகர் ராவ், "அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் பூமி பூஜையில் வெள்ளியிலான அடிக்கல்லை நாட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதன் கட்டுமானத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். ராமர் பிறந்த அந்த புண்ணியத்தலம் இனி ராமர் கோயிலால் கொண்டாடப்படும். இதனைக் கூறிட பாஜக பெருமிதமும் பேரானந்தமும் கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவை எங்கள் ஆட்சிக் காலம் நனவாக்கியுள்ளது.
இடதுசாரிகள், ஏ.ஐ.எம்.ஐ.எம் போன்ற அற்பமான குழுக்கள் எழுப்பும் ஆட்சேபனைகளுக்கு நாங்கள் பதில் கூற முடியாது. அவர்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த உரிமை உண்டு. உண்மையில், இந்திய குடிமகனாக தனது சொந்த மத உரிமைகளையும் சடங்குகளையும் செய்ய அவருக்கு வேறு எவரையும் விட அதிக உரிமைகள் உள்ளன.
ஆட்சேபனை தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், அசாதுதீன் ஒவைசியையும் பூமி பூஜையில் பங்கேற்க அழைக்கிறேன். இதனால் அவர்கள் தங்கள் கட்சிகளின் மத சார்பற்ற தன்மையையும், திறந்த மனப்பான்மையையும் சகோதரத்துவத்தின் மீதான தனிப்பட்ட அக்கரையையும் வெளிப்படுத்த முடியும்" என தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.