முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தெலங்கானா அரசு முன்னெடுத்துள்ளது. தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்ம ராவின் நூறாவது பிறந்த நாளை, விமரிசையாக ஓராண்டு கொண்டாட முடிவு செய்துள்ள தெலங்கானா அரசு, சட்டப்பேரவையில் இது தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, மறைந்த பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் நரசிம்ம ராவுக்கு சிலை எழுப்பி, மைய வளாகத்தில் அவரது உருவப்படத்தை திறக்கவும் தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திற்கு நரசிம்ம ராவின் பெயரை சூட்டவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தோழமைக் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில்தான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது. அந்த சமயத்தில் நரசிம்ம ராவ் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் செயலற்று இருந்தார் என்று குற்றஞ்சாட்டி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இந்த நூற்றாண்டு விழாவை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கர்ப்பிணிகள், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக 2 சத்துணவுத் திட்டங்கள் அறிமுகம்!