அரசின் சேவைகளை அனைவருக்கும் எளிதாக அளிக்கும் வகையில், மாநிலத்தில் 3 தலைநகரங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பேசியிருந்தாா். மேலும், இப்போது மாநில தலைநகராக இருக்கும் அமராவதியில் ஆரம்பகட்ட வளா்ச்சி திட்டங்களே நிறைவடைந்துள்ளதால், அதை சட்டப் பேரவை இருக்கும் தலைநகராகவும், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை செயல் தலைநகரமாகவும், கா்னூல் நகரத்தை நீதித்துறை தலைநகரமாகவும் அமைத்தால், எளிதாக அரசின் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தாா். எனினும், தலைநகரை மாற்றுவது குறித்த விவகாரத்தில் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அமைப்பதற்காக, தங்களது விவசாய நிலங்களை ஏராளமான விவசாயிகள் அளித்திருந்தனா். இந்நிலையில், தலைநகரை மாற்றுவதாக வெளியான தகவல்களால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள், அரசுக்கு எதிராக தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டத்துக்கு எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆதரவளித்துள்ளது.
இந்நிலையில் மந்தடாம் கிராமத்தில் நடைபெறவிருந்த மூன்று தலைநகர எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நார லோகேஷை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதுமட்டுமின்றி, பொதுமக்களை திசைதிருப்புவதாகக் கூறி அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
முன்னதாக பஸ் யாத்திரையை தொடங்கி வைக்கச் சென்ற சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...உபி.,யில் பேருந்து - டிரக் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு