ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார்.
ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், அமராவதியே ஆந்திராவின் தலைநகராக தொடர வேண்டும் என்று கோரி விவசாயிகளின் ‘பஸ் யாத்திரா’-வை தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தொடங்கிவைக்க சென்றபோது, விஜயவாடாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுடன் அவரது மகன் லோகேஷ், தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் கே. அச்சன் நாயுடு உள்ளிட்டவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்து அழைத்து சென்ற பேருந்தை, அவரது கட்சியினர் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க...சைபராபாத் போலீசாருக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி: காரணம் இதுதானா?