ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு, குறிப்பாக பழங்குடியின பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன் குண்டூர் மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
அவர் இறந்த ஈரம் காய்வதற்கு முன் கர்னூல் மாவட்டத்தில் மற்றொரு பழங்குடியின பெண்ணை அவரது கணவரது கண் முன்னே 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. தடுக்கச் சென்ற கணவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதி புகார் கொடுத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தம்பதி வசிக்கும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, விஷயம் மாவட்ட டிஎஸ்பி காதுகளுக்கு எட்டியது. இதையடுத்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல பழங்குடியின மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாதிக்கப்படுவது அம்மாநிலத்தில் தொடர்கதையாகியுள்ளது. இச்சூழலில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, டிஜிபி தாமோதர் கௌதமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் மேற்கூறிய இரண்டு சம்பங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அக்கடிதத்தில், “பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தும், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிய முகாந்திரம் இருந்தாலும் ஒருசில காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால், மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மக்களுக்கும் அவர்களது சொத்துக்கும் பாதுகாப்பற்ற நிலைமை நிலவுகிறது. குற்றவாளிகளைத் தடுத்துநிறுத்த வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 14 மாதங்களில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 15 பேர் கூட்டுப் பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். எட்டு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆறுக்கும் மேற்பட்டோர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குற்றவாளிகளோடு ஒருசில அரசியல்வாதிகளும் காவல் துறையினரும் துணை நின்றால் என்ன நடக்கும் என்பதற்கு ஆந்திராவில் அரங்கேறும் அட்டூழியங்கள் ஒரு எடுத்துக்காட்டு. திஷா சட்டம், திஷா காவல் நிலையங்கள் ஆகியவற்றை ஆரம்பித்தபோது பெருமையாகப் பேசப்பட்டன.
ஆனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை அவை கண்டுகொள்ளவில்லை என்று அப்பட்டமாகத் தெரிகிறது. அவை பெயரளவுக்கு மட்டுமே மாநிலத்தில் செயல்படுகின்றன என்பதையே ஆந்திராவில் அரங்கேறும் குற்றங்கள் காட்டுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம்