சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது தோழி ரியாவின் சகோதரர் சோவிக் சக்ரவர்த்தி, சாமுவேல் மிரண்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சுஷாந்த் சிங் மரணம் பாலிவுட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் மும்பை காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ கைகளுக்கு சென்றது.
சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாட்ஸ்அப் உரையாடல் மூலம் அவருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்தது அறியப்பட்டது. பின்னர் இந்த வழக்கை போதைப் பொருள் தடுப்பு துறையினர் விசாரிக்கத் தொடங்கினர். சுஷாந்த் போதை மாத்திரைகள் பயன்படுத்தியது தொடர்பாக அப்டெல் பசித் பரிகார், ஜைத் விலாத்ரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக கைசான் இப்ராஹிம் எனும் போதைப் பொருள் விற்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு, இதில் தொடர்புடையதாக சுஷாந்த் சிங்கின் தோழி ரியாவின் சகோதரர் சோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோர் போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நாளை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போதைப் பொருள் தடுப்பு துறையினர் தகவல் அளித்துள்ளனர்.