உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடம்மாற்றம் செய்வதற்கும் அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யலாம். கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்யும் பெயர்கள் பரிசீலனை செய்து மீண்டும் அந்தப் பட்டியலை மத்திய அரசு அந்த அமைப்புக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலை ஆராய்ந்த பிறகு இறுதிப் பட்டியலை கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்பும். இறுதிப் பட்டியலில் உள்ள நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ, உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ மத்திய அரசு நியமிக்கும்.
இந்த கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கீழ் இயங்கும். உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த வழக்கறிஞர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். தன்னாட்சி நிறுவனங்களின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பு மே 10ஆம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 7ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ரவி சங்கர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் மத்திய அரசின் தலையீட்டால் அவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செப்டமபர் 5ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஆனால், இன்றுவரை அவரை தலைமை நீதிபதியாக நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. இதற்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா கொண்ட அமர்வு விசாரித்தது. அகில் குரேஷியின் பதவி உயர்வு குறித்த வழக்கை ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ. பாப்டே கொண்ட அமர்வு நவம்பர் 13ஆம் தேதி விசாரிக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், குஜராத் வழக்கறிஞர்கள் குழு, 'மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக குரேஷியை நியமிக்காத மத்திய அரசின் செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய அரசு தலையிடுவது நீதித் துறை மீதான தாக்குதல், தன்னாட்சி நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் முதன்முறையாக 2018 ஜனவரி 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினர்.
முக்கிய வழக்குகளில் நீதிபதிகள் கொண்ட அமர்வுகளைத் தேர்வு செய்யும் தலைமை நீதிபதியின் செயல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் நீதிபதிகளின் நியமனத்தில் சரியான முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் கூறினர். அப்போது, நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை மத்திய அரசு கட்டுப்படுத்தவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோல், நீதித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்துள்ளதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
2010ஆம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தற்போது மத்திய உள் துறை அமைச்சரான அமித் ஷாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் குரேஷி என்பதால் அவர் பழிவாங்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. அதேபோல், அமித் ஷா கைது செய்யப்பட்டபோது, உள் துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். இவர் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கி திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.