கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ், மதர்சார்பற்ற ஜனதா தள கூட்டணி போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மஜத 8 தொகுதிகளிலும் களமிறங்க உள்ளன. அதில், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மாண்டியா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகனான நிகில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மறைந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நடிகருமான அம்பரீஸின் மனைவி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் தனது கணவர், மாண்டியா தொகுதிகளில் களமிறங்கி வெற்றி பெற்று மக்களின் நலனுக்காக உழைத்தார். எனவே இந்த முறை அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப்படும் என கருதினேன். ஆனால் அவர்கள் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான மஜத-விடம் அளித்து விட்டனர். மாண்டியா மக்களின் நலனுக்காக வரும் தேர்தலில், அந்த தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளேன், என்று தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த 2018 நவம்பர் மாதம் காலமான நடிகர் அம்பரீஸ் நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். மேலும் கடைசியாக அவர் மத்திய அமைச்சர் பதவி வகித்தபோது காவிரி விவகாரத்தில், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது மனைவி சுமலதா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முரட்டு காளை, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.