ஒரு அடர்ந்த காடு என்று ஆரம்பிக்கும் கதைகளில், முதலில் நம் நினைவுக்கு வருவது சிங்கம்தான். சிங்கம் என்றால் காட்டுக்கு ராஜா என்பது மட்டுமில்லாமல், அதன் கம்பீரமான நடை, தோற்றம் நினைவுக்கு வரும். அது வெறும் வனவிலங்காக இல்லாமல் ஒரு ராஜாவின் அடையாளமாக நம்மிடையே காணப்படுகிறது. இந்நிலையில் அல்-குரேஷி விலங்கியல் பூங்காவில் காணப்படும் நான்கு சிங்கங்கள் நம் கற்பனையை சுக்குநூறாக உடைக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகரம் கார்டூம். இங்குதான் அல்-குரேஷி விலங்கியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. சூடானில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் அந்நியச் செலாவணியின் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பூங்காவில் உள்ள சிங்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்பு கடந்த மாதம் ஜனவரியில் நாடெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 4 சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்கில் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதில் சில வாரங்களுக்கும் மேலாக போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாமல் ’உடல் மெலிந்த சிங்கங்கள்’ பாவமாக காட்சியளித்தன. இந்த புகைப்படங்கள் காண்போரின் மனதை வெகுவாக பாதித்தது.
இதன் பிறகு குரேஷி பூங்காவை பற்றி நாடே பேசத் தொடங்கியது. இதையடுத்து, சூடானின் அரசாங்கம் நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதன்படி, சிங்கங்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து கிடைக்க வழி வகை செய்தது. இந்த மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பின்பு நான்கு நிங்கங்கள் இயல்பான வாழ்க்கையை பெற்றிருந்தாலும், கண்டகா எனப்படும் பெண் சிங்கம் மோசமான நிலையிலேயே இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக்குழு கண்டகாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அதற்கு கண்பார்வையில் குறைபாடுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கென சிறப்பு கவனிப்புகள் வழங்கப்படுவதால் கண்டகா தன் குறைகளைத் தாண்டி சீக்கிரமே இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பப்படுகிறது.
பொதுவாகவே, ஆண் சிங்கத்தின் எடை 150-250 கிலோ வரையிலும், பெண் சிங்கத்தின் எடை 120-150 கிலோ கிராம் வரையிலும் இருக்கும். ஆனால், கண்டகாவின் உடல் எடை 42 கிலோதான். இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால், கண்டகாவிற்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு கவனிப்பிற்கு பின் கண்டகாவின் எடை 60 ஆக முன்னேற்றமடைந்துள்ளது.
இதுகுறித்து, சமூகநல ஆர்வலர் ஒத்மான் முகமது, ”நான்கு சிங்கங்களில் இரண்டு பெண் சிங்கங்களும், இரண்டு ஆண் சிங்கங்களும் அடங்கும். இதில் இன்னும் இரண்டு சிங்கங்கள் மோசமான நிலையில் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் இவற்றிற்காக சிறப்பு கவனிப்பை வழங்குவதால், சீக்கிரமே நல்ல தீர்வு கிடைக்கும்” என தெரிவிக்கிறார்.
முன்னதாக, உடல் வற்றிய சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ ஒத்மான் முகமதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை - தலைமைக் காவலர் உயிரிழப்பு!