புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இருமொழி கொள்கைக்கு விரோதமான மும்மொழி திட்டம் திணிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி, கல்வித்துறை அலுவலகம் முன்பு புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, பல வளர்ந்த நாடுகள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஐந்து வயதில் துவங்கும் போது, மூன்று வயதில் ஆரம்பக்கல்வியை தொடங்கக்கூறும் இக்கொள்கை குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகவும், மேலும் இது பழைய கல்வி முறையான குருகுலம் போன்ற வேத கால கல்வி முறையை அறிமுகப்படுத்தி, சாதி, மத அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துவதாகவும் கூறினர்.
இட ஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லாமல் சமூக நீதியை புறக்கணிப்பதோடு, பெண் கல்வி குறித்தும் இக்கொள்கையில் தெளிவில்லாமல் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, மத்திய அரசின் இத்தகைய போக்கை எதிர்க்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை 2020 நகலை தீயிட்டு கொளுத்துவதாகவும் மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர். இந்நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது'