கரோனா தொற்றின் காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர், “கல்லூரி படிப்புகள் முடித்தவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கான விதிகளை யுஜிசி மட்டுமே தீர்மானிக்கும், மாநில அரசுகளால் இந்த விதிகளை மாற்ற இயலாது” என்றார்.
மேலும், “இறுதியாண்டு தேர்வுகள் நிச்சயம் நடைபெற வேண்டும். மகாராஷ்டிரா, டெல்லி அரசாங்கங்கள் தேர்வுகளை ரத்து செய்துள்ள பிரமாணப் பத்திரங்களுக்கு பதிலளிக்க நேரம் தேவைப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, யுஜிசி வரும் செப்டம்பர் மாதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.