1990களின் முற்பகுதியில் காஷ்மீரில் வன்முறை அதிகரித்திருந்தபோது, பிரிவினைவாதிகளால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன. இதனால் காஷ்மீரில் இருந்த ரேகல், பல்லாடியம், கயம், ஃபிர்டோஸ், ஷா சினிமா, நீலம், ஷிராஸ், பிராட்வே ஆகிய திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து காலப்போக்கில் இந்தத் திரையரங்குகள் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் தங்குமிடமாகவும் அலுவலகங்களாகவும் மாற்றமடைந்தன.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் மல்டிப்ளக்ஸ் திரையரங்கம் அமையவுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.பி.தாரின் மகன் விஜய் தாருக்கு சொந்தமான இத்திரையரங்கம், காஷ்மீரின் பதாமி பாஹில் உள்ள கண்டோன்மண்ட் பகுதியில் அமையவுள்ளது.
இது குறித்து விஜய் தார் பேசுகையில், ''பிராட்வே திரையரங்கத்தின் கட்டடம் தீ விபத்தால் சேதமடைந்தது. அதனை வாங்கி மீள் உருவாக்கம் செய்து வருகிறோம். இரண்டு திரைகள் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்கமாகவும், அதற்குத் தேவையான தொழில்நுட்பங்களுடனும் மீண்டும் இந்த பிராட்வே திரையரங்கம் உருவாக உள்ளது.
ஜம்முவில் உள்ள குழந்தைகளும் சினிமா பிரியர்களும் திரையரங்குகளில் சினிமாவை ரசிக்கும்போது, காஷ்மீரில் மட்டும் திரையரங்கில் சினிமா பார்க்க முடியாமல் இருக்கக் கூடாது என்ற காரணத்தால்தான், இந்தத் திரையரங்கை கட்டி வருகிறோம். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, இத்திரையரங்கம் தொடங்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : போபால், கட்சி விழாவில் மயங்கி விழுந்த சாத்வி பிரக்யா!