அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராமாயணத்தின் சாரத்தை நாம் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடிந்தால் இந்த தருணம் ஒரு சமூக ஆன்மிக புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தனித்துவமான இந்திய பார்வையை ஈர்க்கும் ஒரு புராணமான ராயாணத்தை 'தர்மம் அல்லது நீதியில் வழி நடத்தல்' என ரத்தினச் சுருக்கமாக சொல்ல முடியும். ராமரின் வாழ்க்கை ஒரு நியாயமான மற்றும் பொறுப்பான சமூக ஒழுங்கை நிறுவுவதில் முக்கியமான மதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. ராமாயணம் இன்றும் உலகிற்கு பொருத்தமான வழிகாட்டியாகவே திகழ்கிறது.
அன்பு, கருணை, அறம், அமைதியான சகவாழ்வு, நல்லாட்சி ஆகியவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சியின் லட்சியத்தையே ஆதாரமாக கொண்டதுதான் ராமராஜ்ஜியம். இந்திய நூல்களில் கூறப்பட்டுள்ளபடி, ராமரின் கருத்துக்கள் மத சார்பற்றவை. மக்களின் வாழ்க்கை, சிந்தனை மீதான அவரது செல்வாக்கு 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழமாக உள்ளார்ந்துள்ளது.
குடிமக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான நிலையான தேடலின் அடிப்படையில் நிறுவப்பட்ட அத்தகைய ராமராஜ்ஜியமே, நமது நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக்காக்கும்" என்றார்.