கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இருவர் தங்களை சேல்ஸ்மேன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும், வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியின் நான்கு வயது குழந்தையைக் கடத்த முயன்றனர். இதனையடுத்து, குழந்தை அழும் சத்தம் கேட்டு ஓடிவந்த பெண், கடத்தல்காரர்களின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு, போராடி தன் குழந்தையை அவர்களிடமிருந்து மீட்டார்.
பின்னர், கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, அக்கம்பக்கத்தினர் சேர்ந்த அவர்களைத் தடுத்துநிறுத்த முயன்றனர். இருப்பினும், கடத்தல்காரர்கள் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்த அனைத்துச் சம்பவமும் அப்பகுதியிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்துப் பேசிய டெல்லி துணை ஆணையர் ஜாஸ்மீத் சிங், ”கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண் போலியானது என தெரியவந்தது. பின்னர் வாகனத்தின் உரிமையாளர் தீரஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் மாமா உபேந்தரின் திட்டத்தின்படி சிறுமியைக் கடத்த முயன்றது தெரியவந்தது. சிறுமியைக் கடத்தி 35 லட்சம் ரூபாய் வரை பணம் பறிக்க இவர்கள் திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க:பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு - சக்தி பஹினி எச்சரிக்கை!