கரோனா தாக்கத்தால் விமான போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலின் முதல்கட்டமாக சர்வதேச விமான சேவைகள் கடந்த மார்ச் 23ஆம் தேதி நிறுத்தப்பட்டன.
இதனால், பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியதால் ஆள்குறைப்பு, ஊதியம் இல்லா விடுப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பின்னர், மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா அச்சத்தில் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.
இதனால், பயணிகளை கவர விமான போக்குவரத்து நிறுவனங்கள் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து வருகின்றன.
அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிய முயற்சியாக பயணிகளுக்கு பல விதமான சலுகைகள், ரிவார்ட்ஸ் வழங்கும், “ஸ்பைஸ் கிளப்” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பயணிகள் விமான முன்பதிவு, மேம்படுத்தல், உணவு மற்றும் பிற துணை நிரல்களுக்கு செலவிடும் ஒவ்வொரு ரூ.100க்கும் அதிகப்பட்சமாக 10 ரிவார்ட்ஸ் புள்ளிகளைப் பெறலாம்.
ஒவ்வொரு ரிவார்ட்ஸ் புள்ளியும் 50 பைசாவுக்கு சமமாக கருதப்படும்.ஸ்பைஸ் கிளப் திட்டமானது கிளாசிக், சில்வர், கோல்ட் மற்றும் பிளாட்டினம் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சில்வர், கோல்ட், பிளாட்டினம் பயனர்களுக்கு செக்-இன் மற்றும் போர்டிங் முன்னுரிமை வழங்கப்படும். அதே போல், ஸ்பைஸ்மேக்ஸில் 20 விழுக்காடு தள்ளுபடியும் கிடைக்ககூடும்.
மேலும், ஸ்பைஸ்ஜெட்டின் வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 250 ரிவார்ட்ஸ் புள்ளிகள் வரை போனஸாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், " ஸ்பைஸ் ஜெட்டின் புதிய ஸ்பைஸ் கிளப் திட்டத்தின் மூலம் உங்கள் பயணத்தை இன்னும் பலனளிக்கும் விதமாக மாறுகிறது.
குறிப்பாக இலவச விமான வவுச்சர்கள், இலவச உணவுகள், ரத்து கட்டணங்கள் கிடையாது, முன்னுரிமை செக்-இன், இலவச இருக்கை தேர்வு மற்றும் நீங்கள் எங்களுடன் பறக்கும் ஒவ்வொரு முறையும் பல பிரத்யேக சலுகைகள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே விமானப் போக்குவரத்து!