உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஜெயித்த தொகுதியான ரே பரேலி தொகுதி மக்களை சோனியா காந்தி சந்திக்கவுள்ளார். இரண்டு நாள்கள் அங்கு அவர் தங்கவுள்ளதாகவும், ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் தொகுதியை அவர் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன் மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் சென்று சோனியா காந்தி தொகுதி மக்களை சந்திக்கவுள்ளார். தொகுதிக்குச் சென்ற பின்னர் கட்சித் தலைவர்களை புஹிமேவ் விருந்தினர் மாளிகையில் சோனியா சந்திக்கயிருக்கிறார்.
கட்சித் தொண்டர்கள், மாவட்டம் மற்றும் மாநிலத் தலைவர்களுக்காக ஒரு நாள் பட்டறையும் நிகழவிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு நடக்க இருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலுக்கான கட்சியின் ஆயத்த நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தாந்தம் குறித்தும், காங்கிரஸ் குறித்தான ஆளும் பாஜக அரசின் தவறான கருத்துகளை எப்படி கையாள்வது என்பது குறித்துமான விவாதங்களும் மேற்கொள்ளப்படும்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பஞ்சாயத்துத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 80 நாடாளுமன்ற இடங்கள் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வென்ற ஒரே இடம் ரே பரேலிதான். காங்கிரசின் சமஸ்தானமான அமேதி தொகுதியையும் பாஜக கைப்பற்றிக்கொண்டது. முன்னதாக ஜூன் மாதத்தில் ரே பரேலிக்கு சென்ற சோனியா காந்தி, தனக்கு மீண்டும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரியங்கா காந்தியுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை