ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கமாக கொண்டு 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தங்கள் கட்சி அலுவலகங்களை திறந்து கட்சியை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என டெல்லி முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியினர் அம்மாநில மக்களை நேரில் சந்தித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியினரின் கள ஆய்வுக்கும், மக்கள் சந்திப்பிற்கும் உத்தரப் பிரதேசத்தில் தற்போது ஆட்சி செய்துவரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில், ரேபரேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்ய ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும், எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி வருகை தந்தார். அப்போது, அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முழக்கங்களை எழுப்பினார். அத்துடன், அவரை தாக்க முயன்று அவர் மீது கருப்பு மையும் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சோம்நாத் பாரதியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரை அங்கேயே தடுத்து வைத்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிந்து அமேதிக்கு கொண்டு சென்றதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளின் நிலை குறித்து அவதூறாகப் பேசியதாக சோம்நாத் பாரதி மீது அமேதியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : கோடீஸ்வரன் நிகழ்ச்சி பெயரில் மோசடி: பாக். தொலைபேசி எண்ணால் சர்ச்சை!