கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறரை லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. கரோனாவால் இதுவரை 30 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் ரெஸ்பிரேட்டரி அண்ட் கிரிட்டிகல் கேர் மெடிசின் (American Journal of Respiratory and Critical Care Medicine) நிறுவனம் சார்பாக, சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பிஎல்ஏ பொது மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 28ஆம் முதல் பிப்.9ஆம் தேதி வரை சிகிச்சை முடிந்து திரும்பிய 16 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பிய பாதி பேருக்கு கரோனா அறிகுறிகள் நீங்கிய பின்னரும் அவர்களது உடலில் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அந்த நிறுவனத்தின் லோகேஷ் ஷர்மா கூறுகையில், 'கரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய நீண்ட நாள்கள் தேவைப்படும்' என்றார்.
இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட அனைவருக்கும் இரண்டு முறை கரோனா கண்டறியும் சோதனை நடத்திய பின்னரே சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதன் அறிகுறிகள் ஐந்து முதல் எட்டு நாள்களுக்குள் தெரியவரும். அதேபோல் சிகிச்சை முடிந்த பின்னரும் கரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் முழுமையாக வெளியேற ஒன்று முதல் எட்டு நாள்கள் வரை ஆகும்.
இதனால் கரோனா சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்கள் மற்றவர்களுக்கு பாதிப்பு வராமல் தடுக்க, மீண்டும் வீடுகளில் எட்டு நாள்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் குறைந்த நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவர்களைக் கொண்டுசெய்தால், இதே முடிவு கிடைக்குமா என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை. இதன் முழுவிவரங்கள் அறிவதற்கு இன்னும் அதிகமான ஆய்வுகள் செய்தால் கண்டறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சோஷியல் டிஸ்டன்ஸ்' காலத்தின் அவசியம்: சுதா சேஷையனின் நுட்பமான விளக்கம்