கேரளாவின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கர் மீது அமலாக்கத் துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் எம். சிவசங்கர் நவம்பர் 26ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நவம்பர் 12ஆம் தேதி நீதிமன்றம் அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
தனக்குப் பிணை வழங்குமாறு கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிவசங்கர் மனு தாக்கல்செய்தார். இந்த மனுவை நவம்பர் 17ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில் தனக்குப் பிணை வழங்கக்கோரி கேரளாவின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கர் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் வந்த பார்சல் மூலம் கேரள மாநிலத்திற்கு தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறையினர், தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோகிராம் தங்கம், ராஜதந்திர சாமான்கள் மூலம் கடத்தப்பட்டு, ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது, சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.