இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வருகைதரவுள்ளார். அப்போது பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 22 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட சாலைப் பேரணி மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் இந்தப் பேரணியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளனர். இதன் பகுதியாக சித்தி பிரிவு மக்கள் தமால் நடனமாடி அமெரிக்க அதிபரை வரவேற்கவுள்ளனர்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவிலிருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்த சித்தி இனமக்கள் தங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தை இருநாட்டு தலைவர்கள் முன் நிகழ்த்திக் காட்டவுள்ளனர். நெருப்புடன் விளையாடியும், தலையில் தேங்காய் உடைத்தும் வீர சாகசங்களை இவர்கள் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்க தங்களுக்கு அழைப்புவிடுத்தது பெரும் மகிழ்ச்சி என ரத்தன்பூர் பகுதியை மையமாகக் கொண்டு வசித்துவரும் சித்தி இன மக்கள் ஆர்வத்துடன் தெரிவித்துள்ளனர்.
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில பாரம்பரிய கலைஞர்களுக்கும் இந்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. விழாவில் பங்கேற்கவுள்ள கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு முன்னதாக தீவிரமாக ஒத்திகைப் பார்த்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி: ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்!