உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மருந்தைக் கண்டுபிடிக்க தங்கள் நேரத்தையும் செலவழிக்கின்றனர். இதை சர்வதேச முன்னணி வார இதழ்களில் ஒன்றான நேச்சர் (Nature) பெரிதும் பாராட்டியுள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளிலுள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற முக்கியமான நேரத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்களைப் போல உலகத் தலைவர்களும் இந்த வைரஸ் தொற்றை ஒழிக்க ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்று முன்னணி சர்வதேச வார இதழான நேச்சர் கூறியுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ள இந்த வார இதழ், பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மருந்தைக் கண்டுபிடிக்க தங்கள் நேரத்தையும் செலவழிக்கிறார்கள். ஆனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும் அதிபர்களும் இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்த இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள உலகத் தலைவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்தார்களோ அதேபோல இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் ஒன்றினைய வேண்டும் என்றும் அந்த இதழ் வலியுறுத்தியுள்ளது.
இருந்தபோதும், கோவிட் -19 வைரஸ் குறித்த சோதனைகளை மேற்கொண்டதற்காக கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் உள்ள பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் எம்ஐடி, ஹார்வேர்டு போன்ற பல்கலைக்கழகங்களையும் போகோட்டாவில் உள்ள கொலம்பியாவின் தேசிய பல்கலைக்கழகத்தையும் அந்த இதழ் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
இதற்கிடையே, ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்குத் தன்னார்வலர்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட Crowdfight COVID-19 என்ற தளமும் பொதுமக்களிடையே பிரபலமடைந்துவருகிறது. இதுவரை 35,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.