17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 177 தொகுதிகளில் முன்னிலையிலும், 166 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான நிதின் கட்கரி, "ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினருக்கு முக்கிய பங்கு உண்டு. தேர்தலால் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து, அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றிதான் இது" என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நிதின், மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 208 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.