திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் முறைகேடு தொடர்பாக மாநில முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் ஐ.ஏ.எஸ்., தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எம்.சிவசங்கர் தங்க கடத்தல் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாலும், ஜாமீன் மனுவை பரிசீலிக்க தேவையில்லை என்று குழு நீதிமன்றத்தில் தெரிவித்ததாலும் இந்த மனு தீர்த்து வைக்கப்பட்டது.
சிவசங்கருக்கு சார்பாக ஆஜரான வக்கீல் பி.ராமன் பிள்ளையும் இதனை ஒப்புக் கொண்டார். முன்னதாக, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அவரை கைது செய்ய வேண்டாம் என்று கேரள உயர் நீதிமன்றம் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சுங்கத் துறையை கேட்டுக்கொண்டது.
சுங்கத் துறை அலுவலர்கள் அவரை ஒரு குற்றவாளியைப் போலவே நடத்துகிறார்கள் என்றும் அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சுங்கத் துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவசங்கரின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: ஸ்வப்னா சுரேஷ் மீது பாய்ந்த புது வழக்கு