மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராதவிதமாக, குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜகவுடன் அஜித் பவார் இணைந்தது, அவரது தன்னிச்சையான முடிவு என தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக - சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டது. சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்ததால், அவர்களது கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பின், தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனா ஆதரவு அளிக்காத காரணத்தால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்தது. இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க காலஅவகாசம் கேட்க, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காலஅவகாசம் கேட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்தது. இறுதியாக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உதவியோடு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்பார் என சரத் பவார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக பாஜக நேற்று, தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரது ஆதரவுடன், ஆட்சியமைத்தது. இந்நிலையில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு, இன்று காலை தோராயமாக 11 மணி அளவில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: #MAHARASTRAPOLITICS LIVE: மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் உடனுக்குடன்