காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலம் இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. காங்கிரஸின் ஊடக முகமாக இருந்தவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகினார். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரை மீண்டும் கட்சியில் இணைத்தது வருத்தமளிப்பதாகவும், தன் சுயமரியாதைக்கு இழுக்கு எனத் தனது ட்விட்டர் பதிவில் விவரமாக தெரிவித்திருந்தார் பிரியங்கா. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அடுத்த நாளே சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
புதிதாக இணைந்த பிரியங்கா சதுர்வேதிக்கு 'உபநேத்தா' என்ற புதிய பதவியை சிவசேனா கட்சி இன்று வழங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய பிரியங்கா சதுர்வேதி, இந்த புதிய பொறுப்பை தனக்கு அளித்த உத்தவ் தாக்கரேவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தனது பணியை சிறப்பான முறையில் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.