தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, முனைவர் பட்ட மாணவர் ஷர்ஜூல் இம்ரான் என்பவர், மத்திய அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மதம், இனம், மொழி, சாதி ஆகியவற்றின் மூலம் பகை உணர்வுகளை ஊக்குவித்தல் பிரிவின்கீழ், ஜனவரி 25ஆம் தேதி டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிகார் மாநில் ஜேஹனாபாத்தில், மாணவர் ஷர்ஜூல் இம்ரானை செவ்வாய்க்கிழமை கைதுசெய்த குற்றப்பிரிவு காவல் துறையினர், டெல்லி மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று (ஜன. 29) முன்னிலைப்படுத்தினர்.
இது தொடர்பாக பேசிய டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தியோ, தேசதுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ஷர்ஜூல் இம்ரானிடம், நாளை (ஜன. 31) முதல் தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு, இந்த வழக்கில் பிற மாணவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தெரியவரும் என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல்