டைம் வார இதழ் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மதிப்புமிக்க 100 நபர்கள் பட்டியல் வெளியிடப்படும். இதில் தொழிலதிபர்கள், பிரதமர்கள், நடிகர்கள் ஆகியோரின் பெயர் தான் இடம்பெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரான்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத 82 வயது மூதாட்டியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அதற்கு மையப் புள்ளியாக டெல்லி ஷாஹீன் பாக் மாறியது. அந்தப் போராட்டக் களத்தில் மக்களைத் திரட்டி அமர்ந்திருந்த மூதாட்டி பில்கிஸின் முகம் மக்கள் நெஞ்சங்களில் பதிந்தது. ஷாஹீன் பாக் போராட்டத்தின் முகமாகவும் இவர் பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில் டைம் வார இதழின் மதிப்புமிக்க நபர்கள் பட்டியலில் இடம்பெற்றதையடுத்து அவர் ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசினார். அதில், ''இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எல்லோரும் எனக்கு அதீத மரியாதை அளிக்கின்றனர். இந்தப் பெயருக்கு மக்கள் தான் காரணம். சிஏஏ பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இந்த நேரத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மறுதேர்வர்களின் முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியாகும் - சிபிஎஸ்இ