மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் கடந்த ஆண்டு இறுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. இதில், குறிப்பாக டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து ஷாஹீன் பாக்கில் 101 நாள்கள் போராட்டம் நடந்து வந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அப்போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ஷாஹின் பாக்கில் நடந்த போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த உலேமா அமைப்பின் செயலாளர் ஷாஷாத் அலி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவரை டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இவருடன் உலேமா அமைப்பைச் சேர்ந்த பலரும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டம் செய்துவிட்டு, தற்போது ஷாஷாத் அலி பாஜகவில் இணைந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்' - ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்