இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், நாட்டில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். நாளை கூடவுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருடன் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "டெல்லியில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை சரிசெய்யும் வகையில் 500 ரயில் பெட்டிகள் உடனடியாக வழங்கப்படும். டெல்லியில் அடுத்த இரண்டு நாள்களில் கரோனா பரிசோதனைகள் இரண்டு மடங்கும், அடுத்தி சில நாள்களில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காகவும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளால் 60 விழுக்காடு படுக்கைகள் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் கரோனா பரிசோதனை, சிகிச்சை விகிதத்தை நிர்ணயிக்கவும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா கூறினார். இந்தக் குழு தனது அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ளது.
இதையும் படிங்க: 'மோடியின் இயலாமை' - கரோனா பாதிப்பில் நான்காவது இடத்திற்கு வந்த இந்தியா!