டெல்லி: மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் 'நிறுவன தினத்தையொட்டி' மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி விஜய தசமி நாளையொட்டி கேஷவ் பல்ராம் ஹெட்ஜேவர் என்பவரால் தொடங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, ஒழுக்கம், தேசபக்தி மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சின்னமாகும். தேசியவாதத்தின் அஸ்திவாரத்தில் நின்று, தன்னலமற்ற மனப்பான்மையுடன் நாட்டுக்கு சேவை செய்வதற்கு, நாட்டின் இளைஞர்களை ஊக்குவிக்கிறது என அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், கடந்த 95 ஆண்டுகளாக, அமைப்பின் ஒவ்வொரு தன்னார்வலரும் இந்தியாவை உலக நாடுகளில் முன்னிலைப் படுத்தவும், அதன் பெருமையை மீட்டெடுக்கவும் உறுதிபூண்டுள்ளனர். இன்று ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தையொட்டி அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு, தேசிய சேவை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கிய மந்திரத்தை ஊக்குவிக்கிறது. அதே வேளையில் மனிதகுலத்தை அதன் அற்புதமான திறன்களுடன் சேவையாற்றவும் நம்பிக்கையளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் 'நிறுவனத் தினத்தில்' அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.